28 Oct 2013

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாற்றுச் சுருக்கம் - Life story of Sundramoorthi Swami

சுந்தரமூர்த்தி சுவாமிகள்
வரலாற்றுச் சுருக்கம்

   திருக்கயிலாயத்தில் சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டராய் இருப்பவர் ஆலால சுந்தரர். அவர் மலர்கொய்யும் போது ஒருநாள் கமலினி அநிந்திதை என்பார்மேல் மனம் போக்கியதால் பூவுலகில் பிறக்க நேர்ந்தது. 

   அந்நாளில் நம் செந்தமிழ் நாட்டில் பல சிற்றரசுகள் இருந்தன. அவற்றை நாடுகள் என்றே வழங்கினர். அவற்றுள் ஒன்றுதான் திருமுனைப்பாடி நாடு. அதன் தலைநகர் திருநாவலூர். திருநாவலூரில் ஆதிசைவ மரபில் கி.பி. 701-ல் சடையனார்க்கும் இசைஞானியார்க்கும் மகனாக ஆலால சுந்தரர் அவதரித்தார். பெற்றோர்கள் அவர்க்கு ஆரூரர் என்று பெயரிட்டனர். ஆரூரர் இளம் பருவத்தில் திருமுனைப்பாடி நாட்டு மன்னரான நரசிங்க முனையரால் மகன்மை கொள்ளப் பெற்றார். திருநாவலூருக்கு அருகிலுள்ள புத்தூரில் வசித்து வந்த சடங்கவி சிவாசாரியார் என்ற ஆதிசைவ வேதியரின் மகளை திருமணம் செய்யவிருந்த ஆரூரரை, மிகவும் வயதான அந்தணப் பெரியவர் வடிவில் வந்த சிவபெருமான் தடுத்தாட்கொண்டார். திருவெண்ணெய் நல்லூர்க் கோயிலில் இறைவன் காட்சியளித்து அடியெடுத்துத் தரப் 'பித்தா பிறைசூடி' என்ற கனிச்சுவையிலும் நனிச்சுவையுடைய திருப்பதிகத்தைப் பாடினார். பின்னர் இறைவனாலேயே 'வன்தொண்டன்' என்று அழைக்கப் பட்டார். திருவதிகையில் சித்தவட மடத்தில் துயிலும்போது இறைவனால் திருவடி சூட்டப்பெற்றார். பின்பு பல தலங்களைப் பணிந்து திருவாரூரை அடைந்தார். 

   திருவாரூரில் பரவையாரை மணந்தார். தேவாசிரியன் முன் நின்று அடியார்களை வணங்கி சிவபெருமானால் அடியெடுத்து கொடுக்கப் பெற்ற 'தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்' என்ற  திருத்தொண்டத் தொகையை, சிவபெருமானுடைய தோழராகிச் சைவம் தழைக்கவும், சிவனடியார் சிறப்புகளை மக்கள் உணர்ந்து நன்னெறியில் நடக்கவும் பாடியருளினார். குண்டையூரில் கிடைத்த நெல் மலையைக் கொணர ஆட்கள் வேண்டி திருக்கோளிலி ஆலயம் வந்து 'நீள நினைந்தடி யேன்' என்ற திருப்பதிகம் பாடினார். இறைவனின் கட்டளைப்படி பூதகணங்கள் அன்றிரவே நெல் மலைகளைத் திருவாரூருக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டன. நாட்டியத்தான்குடியில் 



சோழமன்னின் படைத்தலைவர்களுள் ஒருவரும், சிவனடியாருமான கோட்புலியாரின் சிங்கடி, வனப்பகை ஆகிய இரண்டு புதல்வியர் களைத் தம் புதல்வியராகவே கருதி மகண்மை கொண்டார். திருப்புகலூரில் இறைவன் அருளால் தனக்கு தலையணையாக வைத்திருந்த செங்கற்கள் பொற்கட்டிகளாக மாறியதை எண்ணி வியந்து, 'தம்மையே புகழ்ந்திச்சை பேசினும்' எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடி இறைவனைப் பலவாறு போற்றிப் புகழ்ந்தார். இறைவன் தந்த பொன் கட்டிகளை எடுத்துக் கொண்டு சுந்தரர் திருவாரூர் நோக்கிப் புறப்பட்டார். திருமழபாடிக்குப் போய், அவ்வூர் இறைவன் முன், 'பொன்னார் மேனியனே' என்ற திருப்பதிகத்தைப் பாடினார். பின்பு பல தலங்களையும் வழிபட்டுத் திருபாச்சிலாச் சிரமத்தை அடைந்து, தமக்கும் பொன்னைத் தந்தருள வேண்டும் என்னும் குறிப்புடன் சிவபெருமானை வணங்கினார். அவர் விரும்பிய வண்ணம், இறைவன் பொன்னைத் தந்தருளாமையால், அவன்பால் முறைப்பாடு உடையவராய் மனம் புழுங்கி நின்று, 'வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும்' என்னும் திருப்பதிகத்தைப் பாடியருளினார். உடனே இறைவன் நம்பியாரூரனுக்கு பொருட் குவையினைத் தந்தருளினான். திருப்பாண்டிக் கொடுமுடி என்னும் திருக்கோயிலை இறைஞ்சி, 'மற்றுபற்று எனக்கின்றி' என்னும் நமச்சிவாயத் திருப்பதிகம் பாடியருளிளார். திருப்பனையூர் வழியே அவர் சென்றபோது அவ்வூரில் குடிகொண்டருளும் சிவபெருமான், ஆடல் காட்சியைக் காட்டி அருள் புரிந்தார். திருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாச்சலத்தில் இறைவனை நினைந்து 'மெய்யைமுற் றப்பொடிப் பூசியோர் நம்பி' எனத் தெடங்கும் திருப்பதிகம் பாடி பன்னிரண்டாயிரம் பொன் பெற்று மணிமுத்தாற்றில் இட்டுத் திருவாரூர்க் கோவில் திருக்குளத்தில் மூழ்கி 'பொன் செய்த மேனியினீர்' என்ற திருப்பதிகம் பாடி பொன்னை எடுத்துக் கொண்டார். 

   திருக்காளத்தி மலையில் அவர் தங்கியிருந்தபோது, வட இந்தியாவில் உள்ள திருப்பருப்பதம், திருக்கேதாரம் முதலிய திருத்தலங்களில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை நினைந்து திருப்பதிகங்கள் பாடி துதித்தார். பின்னர் திருவொற்றியூரை அடைந்து புற்றிடங் கொண்டாரை வழிபட்டு அவ்வூரில் தங்கி இருக்கும்போது 'ஒற்றியூரினின்றும் அகலேன்' என்று சபதம் செய்து கொடுத்துச் சங்கிலியாரை மணந்து கொண்டார். ஒருநாள் திருவாரூரை நினைந்து ஒற்றியூரினின்றும் புறப்பட்டார்.சபதம் மீறியதனால் கண் பார்வையை இழந்தார். 


   அடியார்கள் வழிகாட்டப் பலபதிகளையும் வணங்கிச் செல்லும் போது திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் பெற்றார். காஞ்சிபுரத்தில் இடக்கண் பார்வை மட்டும் பெற்று 'ஆலந்தான் உகந்து அமுது செய்தானை' என்ற அற்புதத் திருப்பதிகம் பாடி இறைவனை பரவினார். திருவாரூர் தியாகேசர் திருக்கோவிலை அடைந்து 'மீளா வடிமை உமக்கே' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடித் தமது வலக்கண் பார்வையையும் பெற்றார். பரவையார் ஊடல் கொண்டிருப்பதை அறிந்து இறைவனையே இருமுறை தூதாக அனுப்பி ஊடலைத் தணிவித்துப் பரவையாரின் மனைக்குச் சென்றார். இறைவனைத் தூது அனுப்பியதால் மனம் மாறுபட்ட ஏயர்கோன் கலிக்காமர் கோபத்தைத் தணிப்பதற்குச் சென்றார். அதற்குள் கலிக்காமர்   உயிர்   துறக்க,   இறையருளால்  அவரை  உயிர் பிழைப்பித்தார். பின்பு நாகப்பட்டினம் சென்று அங்குக் கோவில் கொண்டுள்ள சிவபெருமானை வணங்கிப் பதிகம் பாடி பொன்னும் மணியும் பூண்ஆடை சாந்தம் முதலாயினப் பெற்றுத் திருவாரூர் திரும்பினார். 

   சேரநாட்டு மன்னன் சேரமான் பெருமான் கழறிற்றறிவார் திருவாரூர்க்கு வர, ஆரூரர் அவரை வரவேற்று உபசரித்தார். சிலநாட்களுக்குப் பின் சேரமான் அழைப்பை ஏற்று, சேரமானுடன் தாமும் புறப்பட்டு காவிரியாற்றின் தென்கரை வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, காவிரியாற்றின் வடகரையில் இருக்கும் திருவையாறு சென்று ஐயாறப்பனை வணங்கிட வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு ஏற்பட்டது. ஆனால், காவிரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. 'பரவும் பரிசொன் றறியேன்' எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடி இறைவன் அருளால் காவிரி ஆறு பிரிந்து வெள்ளம் வழிந்தோடி வற்றியது. பின்னர் ஐயாறப்பனை அவர்கள் வணங்கி திரும்ப தென்கரை சென்ற பிறகே காவிரியில் பிரிந்து நின்ற வெள்ளம் தொடர்ந்து செல்லத் தொடங்கியது. பின்னர்  பாண்டிநாடு, சோழநாடு, கொங்குநாடுகளில் உள்ள தலங்களை வழிபட்டுப் பதிகம் பாடிக் கொடுங்கொளுரை அடைந்தார். அங்கே சேரமானால் உபசரிக்கப் பெற்றுச் சிலநாட்கள் தங்கி பெருநிதியம் பெற்றுத் திரும்பி வரும் வழியில் திருமுருகன் பூண்டிக்கு அருகில் இறைவனருளால் பூதங்கள் வேடர் வடிவில் சென்று நிதியத்தைக் கவர்ந்தன. 'கொடுகு வெஞ்சிலை'ப் பதிகம் பாடி இழந்த நிதியத்தைத் திரும்பப் பெற்றார். பின்பு திருவாரூரை அடைந்து சில நாட்கள் தங்கி இருந்தார். 

    மீண்டும் மலை நாடு செல்லக் கருதிப் போகும் வழியில் திரு அவிநாசியில் முதலையுண்ட பாலனைப் பதிகம்பாடி வருவித்தார். பின்னர் 
   

சேரநாட்டை அடைந்து, சேரமான் பெருமானால் வரவேற்கப்பட்டு சேரநாட்டு
தலைநகரான மகோதை என வழங்கப்பட்ட கொடுங்கோளுரில் விருந்தினராகத் தங்கிச் சேரமானுடன் அளவளாவி மகிழ்ந்திருந்தார். ஒரு நாள் சுந்தரர் சிவபெருமானை வணங்குவதற்காக திரு அஞ்சைக்களம் சென்று, இறைவனின் திருச்சந்நிதானத்தில் நின்று, 'நான் தங்கள் பாதாரவிந்தத்தை அடைய விரும்புகிறேன். தாங்கள் அதற்கு அருள் புரிதல் வேண்டும்' என்று மனமுருகி வேண்டி, 'தலைக்குத் தலைமாலை' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி, மனமுருகி நின்றார். இறைவரும் சுந்தரரைத் திருக்கயிலாயத்திற்கு அழைத்து வரும்படி வெள்ளை யானையுடன் தேவர்களைத் திருவஞ்சைக்களத்திற்கு அனுப்பனார்.

   வெள்ளை யானையுடன் திருவஞ்சைக்களத்திற்கு வந்த தேவர்கள், சுந்தரரை வணங்கி, இறைவனின் கட்டளையை எடுத்துச் சொன்னார்கள்ளூ திருக்கயிலாயத்திற்கு எழுந்தருளும்படி அன்புடன் கேட்டுக் கொண்டார்கள். இறைவனின் கட்டளையைச் சிரமேல் ஏற்று, வெள்ளை யானை மீது ஏறி, தேவர்கள் முன் செல்ல, கயிலாயத்தை நோக்கிச் சென்றார். அவ்வாறு செல்லும்போது, தம்முடைய அருமை நண்பரான சேரமான் பெருமானை நினைத்துக் கொண்டே இருந்தார். அதை இறைவன் திருவருளால் அறிந்த சேரமான் பெருமான், அடுத்த நொடியே தன்னுடைய வெள்ளை குதிரையில் ஏறி, அதன் காதில் சிவ மந்திரமாகிய திருவைந்தெழுத்து மந்திரத்தை ஓதினார். அவ்வளவுதான்! அந்தக் குதிரை வானில் எழுந்து . மிக வேகமாகச் சென்று, சுந்தரர் ஏறிச் சென்ற வெள்ளை யானையை வலம் வந்து அதற்கு முன்னே செல்லலாயிற்று. வானில் சென்று கொண்டிருந்த போது சுந்தரமூர்த்தி பெருமான், 'தானென்னை முன்படைத்தான்' என்ற திருப்பதிகத்தைப் பாடிக் கொண்டே சென்றார். இவ்வாறாக, தம் பதினெட்டாம் வயதில் (கி.பி. 718-ல்) ஆடிச் சுவாதி நாளில் திருக் கயிலையை அடைந்தார்.

திருச்சிற்றம்பலம்.




No comments:

Post a Comment