திருவாசகம்



திருவாசகம் ஓர் அருள் நூல்ளூ இஃது ஓர் அநுபவநூல். இந்நூலில் உள்ள ஒவ்வொரு சொல்லும், பழுத்த மனத்து அடியவரின் பண்பட்ட உள்ளத்திலிருந்து சிவபோத முயற்சியால் வெளிப்பட்டது. இவ் அரும் பெறல் நூலினை அருளிச் செய்தவர், வாதவூரடிகள் எனும் மணிவாசகப் பெருந்தகை ஆவர். சிவபெருமானின் திருவருள் உள் நின்று உணர்த்த, தன்செயல் அற்றுத் தான் அற்றபின், நாதன்தன் செயலான நிலையில் விளைந்த வாக்கு, திருவாசகம் ஆகும்.
கடையூழி வரும்போது, தானே தனித்து நிற்கும் நிலையில், தனிமையைக் கழிக்கும் பொருட்டு, சிவபெருமான் அந்தணர் வடிவில் மானுடச் சட்டை தாங்கி, கையேட்டு எழுத்தாளர் ஆகி, தாம் பாடிய திருவாசக திருப்பனுவல்களையும், திருக்கோவையார் பாடல்களையும் மாணிக்கவாசகர் சுவாமிகள் முறையாகச் சொல்ல, அவற்றை தன் கையால் எழுதி, ஒரு பிரதி வைத்துக் கொண்டார். பின்னர் அவர் அப்பாடல்களின் முடிவில், 'திருவாதவூரன் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான் எழுதியது' என்று எழுதி அதன் கீழ் கையொப்பமிட்டார். பின்னர் அந்தத் திருமுறை யேடுகளை அழகாக அடுக்கிக் கட்டி, அவற்றை அன்றிரவு தில்லைச் சிற்றம்பலத்தின் வாயிர்படியில் வைத்தார். அத்தகைய சிறப்பு வாய்ந்தது திருவாசகம்.
பலகாலும் பயின்று பயின்று, அழுந்தி யறிந்து, ஆனந்தப் பரவசத்தில் தோய்ந்த அநுபவத்தால், கற்றாரையும் கேட்பாரையும் பிணிக்கும் பெருமை பெற்றுச் சொல்நடையும் பொருள்நடையும் அப்படி அப்படியே பின்னிப் பிணைந்து, பல கோடி உள்ளங்களைக் கரைத்துக் கண்ணீர் பெருககும்கனழவை உடையது, இத்திருவாசகம்.
'திருவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார்' என்பது பழமொழி.

திருவாசகப் பாராயணம் தொடங்குவதற்கு முன்பு, அனைவரும் பாடும் ஒரு வெண்பா உள்ளது. அது வருமாறு,
'தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எம்கோன்
திருவாசகம் என்னும் தேன்'
இந்தச் சிறப்புப் பாயிரத்தைப் பாடியருளிய பெருமகனார் யாவர் என்பது அறியக் கூடவில்லை. இவ்வெண்பா, திருவாசகத்தின் அரும்பெரும் சிறப்பை நமக்கு உணர்த்துகின்றது.

திருவாசகத்தை மெய்யன்புடன் ஓதுவார், ஓதுவதை கேட்பார், கேட்ட பின் உணர்வார், அனைவரையும் திருவாசகம் பேரின்பத்தில் திளைக்கச் செய்ய வல்லது.

திருவாசகம் ஓர் உள்ளத்தை உருக்கும் பனுவல். கல்லான நெஞ்சையும் கரைந்துருக வைக்கும். எல்லை மருவா நெறியைத் தருவது. தேனினும் இனியது. தெவிட்டுதல் தேனுக்கு உண்டு. தெவிட்டாத தேன் என்பார்கள் திருவாசகத்தை.
நீ உன்னைக் கொடுத்தால், சிவனையும் பெறலாம். 'தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னை சங்கரா ஆர் கொலோ சதுரர்' என்று பாட வைத்தது.
திருவாசகப் பாடல்களின் சிறப்பு அவை மனிதனைச் சிந்திக்கத் தூண்டுவனவாகவும், உயர் நிலைக்கு உயர்த்த வல்லவையாகவும் அமையப் பெற்றிருப்பது தான். திருவாசகத்திலுள்ள பெரும்பான்மையான பாடல்கள் இறைவனை முன்னிலைப் படுத்தி மாணிக்கவாசகர் தமது அன்பினையும், ஆற்றாமையையும், தாழ்மையையும், எளிமையையும், அவனிடம் வெளிப்படுத்துகின்ற வண்ணம் அமைந்துள்ளன. இதன் காரணமாக இப்பாடல்களை உணர்ந்து உணர்வு பூர்வமாகப் பாடுகின்ற போது பாடுகின்றவர்கள் தங்கள் உள்ளத்து உணர்ச்சிகளை இறைவனிடம் தெரிவிக்கின்ற தன்மை வாய்ந்தனவாகவும் விளங்குகின்றன.
பெண் சுமந்த மேனியனை மண் சுமக்கவும், மன்னன் பிரம்படியால் புண் சுமக்கவும் செய்ய வைத்தது. பழமைக்கு பழமையானது. புதுமைக்கு புதுமையானது. முந்தை வினை எல்லாம் முடிவுற செய்ய வல்லது. முத்தி நெறியை தரவல்லது. சிவ பூஜைகள் செய்வோர், திருவாசகத்தை வைத்தும் பூஜைகள் செய்யலாம். திருவாசகத்தை ஓதியும், உணர்ந்தும் உய்வு அடைவோம்.
நீ உன்னைக் கொடுத்தால், சிவனையும் பெறலாம். 'தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னை சங்கரா ஆர் கொலோ சதுரர்' என்று பாட வைத்தது.

No comments:

Post a Comment