31 Aug 2012

பிடித்தப்பத்து-(மாணிக்கவாசகர்-சுவாமிகள்-அருளியது)


3. பிடித்தப்பத்து
(மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளியது)

திருச்சிற்றம்பலம்


     1.  உம்பர்கட் கரசே ஒழிவற நிறைந்த
           யோகமே ஊற்றையேன் தனக்கு
        வம்பெனப் பழுத்தென் குடிமுழு தாண்டு
           வாழ்வற வாழ்வித்த மருந்தே
        செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே
           செல்வமே சிவபெரு மானே
        எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
           எங்கெழுந் தருளுவ தினியே.

      விண்ணவர்களுக்கு வேந்தனே! எங்கும் நீக்கமில்லாது நிறைந்திருக்கின்ற  பரம்பொருளே! அழுக்கு மனத்தை உடையவனாகிய எனக்கு புதுமை என்னும்படி அருள் கனிந்து என் குடும்பம் முழுவதையும் ஆட்கொண்டு வினைப் போகமான வாழ்வை நீக்கி மெய்யான வாழ்வு வாழச் செய்த அருமருந்தே! செவ்விய நூற் பொருளின் முடிவே! சீர்மிகுந்த கழல் அணிந்த செல்வமே! சிவபெருமானே! நானும் என்னைச் சேர்ந்தாரும் உய்யும் பொருட்டு உன்னை உறுதியாகப் பற்றினேன். இனிமேல் என்னை விட்டு எங்கே எழுந்தருளிச் செல்வது?
       
     2.  விடைவிடா துகந்த விண்ணவர் கோவே
           வினையனே னுடையமெய்ப் பொருளே
        முடைவிடா தடியேன் மூத்தற மண்ணாய்
           முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து
        கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட
           கடவுளே கருணைமா கடலே
        இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
           எங்கெழுந் தருளுவ தினியே.

       காளையை விடாது வாகனமாகக் கொண்ட தேவர் பெருமானே! வினையின் விளைவாய் வருந்தும் அடியேனுடைய மெய்ப்பொருளே! புலால் நாற்றம் வீசுகின்ற புழுக்கத் தக்க இந்த உடம்பில் நான் கட்டுண்டு கிடந்து அழிந்து போகாத வண்ணம் காத்து என்னை ஆட்கொண்ட கடவுளே! பெருங்கருணைக் கடலே! உன்னை எந்த நேரமும் விடாது இறுகப் பற்றினேன். நீ இனிமேல் என்னை விட்டு எங்கே எழுந்தருளிச் செல்வது?

     3.  அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
           அன்பினில் விளைந்த ஆரமுதே
        பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
           புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
        செமமையே ஆய சிவபதம் அளித்த
           செல்வமே சிவபெரு மானே
        இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
           எங்கெழுந் தருளுவ தினியே.

        தாய் போன்றவனே! தந்தை ஆனவனே! ஒப்பில்லாத மாணிக்கம் போன்றவனே! அன்பெனும் பால் கடலில் விளைந்த அருமையான அமுதமே! பொய்மையான செயல்களை அதிகமாகச் செய்து காலத்தை வீணடித்து, புழப்பற்றி அலைகின்ற உடலையும், கீழ்மைக் குணத்தையும் உடைய எனக்கு,  மிக மேன்மையான சிவபோகத்தைக் கொடுத்தருளினை! எம்பெருமானே, இவ்வுலகில் உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் என்னை விட்டு எங்கே எழுந்தருளிச் செல்வது?

     4.  அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே
           பெருந்திறல் அருந்தவர்க் கரசே
        பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த
           போகமே யோகத்தின் பொலிவே
        தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த
           செல்வமே சிவபெரு மானே
        இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
           எங்கெழுந் தருளுவ தினியே.

       கருணை ஒளி வீசும் சுடரொளியே! கனிந்த நிலையில் உள்ள ஒரு ஒப்பற்ற பழம் போன்றவனே! பேராற்றல் கொண்ட அருந்தவத்தினர்க்கு அரசே! மெய்ப்பொருள் விளக்கும் மெய்ஞ்ஞான நூல் ஆனவனே!  புகழ்தலைக் கடந்த இன்பம் போன்றவனே! யோகத்தின் விளக்கமான் பயனானவனே! தெளிந்த மனத்தினை உடைய அடியாரிடத்துத் தங்கிய அருட் செல்வமே! சிவபெருமானே! அறியாமை நிறைந்த இவ்வுலகத்தே உன்னை உறுதியாகப் பற்றினேன்.  இனி;மேல் நீ என்னை விட்டு எங்கே எழுந்தருளிச் செல்வது? எமை ஆண்டருள்க இறையே!

     5.  ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன்
           உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
        மெய்ப்பதம் அறியா வீறிலி யேற்கு
           விழுமிய தளித்ததோ ரன்பே
        செப்புதற் கரிய செழுஞ்சுடர் மூர்த்தீ
           செல்வமே சிவபெரு மானே
        எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
           எங்கெழுந் தருளுவ தினியே.

       ஒப்பும் உவமையும் இல்லாத தன்மையுடைய ஒருவனே! அடியேனுடைய மனத்துள் விளங்குகின்ற அறிவொளியே! உண்மையானதும், நிலை பேறுடையதும் எது என்று அறிந்து கொள்ள மாட்டாத எனக்கு மெய்ஞ்ஞானம் என்னும் சிறந்த பொருளைத் தந்த அன்பு வடிவானவனே! சோல்லுவதற்கு அரிய வளம் பொருந்திய ஒளி வடிவினனே! நிலைத்த செல்வமே! சிவபெருமானே! யான் செயலிழந்து தளர்வுற்ற நிலையில் உன்னை உறுதியாகப் பிடித்துக் கொண்டேன்.  இனிமேல் என்னை விட்டு நீ எழுந்தருளுவது எங்கு?

     6.  அறவையேன் மனமே கோயிலாக் கொண்டான்
           டளவிளா ஆனந்த மருளிப்
        பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட
           பிஞ்ஞகா பெரியஎம் பொருளே
        திறவிலே கண்ட காட்சியே அடியேன்
           செல்வமே சிவபெரு மானே
        இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
           எங்கெழுந் தருளுவ தினியே.

         திக்கற்றவனாகிய என்னுடைய உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு எனக்கு எல்லையற்ற பேரின்பத்தைக் கொடுத்து, என் பிறப்பின் மூலத்தைக் களைந்து என் குடும்பம் முழுவதையும் ஆண்டு கோண்ட தலைக்கோல முடையவனே! எம் பெருமையான மெய்ப் பொருளே! தெளிவாக நான் கண்ட காட்சியானவனே! அடியேனுடைய நிலைத்த செல்வமே! சிவபெருமானே! இறுத்யில் உன்னை இறுதியாகப் பற்றினேன்.  இனி நீ எழுந்தருளிச் செல்வது எங்கே?

     7.  பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப் 
           பற்றுமா றடியனேற் கருளிப்
        பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து 
           பூங்கழல் காட்டிய பொருளே
        தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ
           செல்வமே சிவபெரு மானே
        ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
           எங்கெழுந் தருளுவ தினியே.

         பிறவி தோறும் தொடர்ந்து வரும் பாசத்தளையை வேரோடு அறுக்கும் பழம் பொருளானவனே! அன்பு செய்யும் வகையை அடியேனுக்கு அருள் செய்து, எனது வழிபாட்டை விருப்புடன் ஏற்றவனே! எனது உள்ளத்துள் புகுந்து அழகிய திருவடிகளைக் காட்டிய மெய்ப் பொருளே! கதிர் வீசும் ஒளி விளக்கே! நிலையான செல்வமே! சிவபெருமானே! உன்னை உறுதியாகப் பற்றிக் கொண்டிருக்கும் என்னை விட்டு நீ எங்கே செல்வது. என்னைக் காத்தருள்க இறையே!

     8.  அத்தனே அண்டர் அண்டமாய் நின்ற
           ஆதியே யாதும் ஈறில்லாச்
        சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த
           செல்வமே சிவபெரு மானே
        பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப்
           பிழைத்தவை அல்லையாய் நிற்கும்
        எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
           எங்கெழுந் தருளுவ தினியே.

       அப்பனே! தேவராயும், அத்தேவர் உலகமாயும் நின்ற முழு முதற்பொருளே! சற்றும் முடிவில்லாத ஞான வடிவினனே! அன்பர்கள் உறுதியாய்ப் பற்றிக் கொண்ட நிலைபெற்ற செல்வமே! சிவபெருமானே! அடியாரிடத்துப் பெரு விருப்புக் கொண்டவனே! எல்லா உயிர்களோடும் கலந்து அவையேயாய், அவை நிலை பெறக் காரணமுமாய், அவையல்லாது வேறு பொருளாய் நிற்கும் தன்மையை உடைய மாயம் உடையவனே! உன்னை இறுகப் பிடித்துக் கொண்டேன். நீ இனிமேல் என்னை விட்டு எங்கே எழுந்தருளிச் செல்வது?

     9.  பால்நினைந் துர்ட்டு;டந் தாயினுஞ் சாலப்
           பரிந்துநீ பாவியே னுடைய
        ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
           உலப்பிலா ஆனந்த மாய
        தேனினைச் சொரிந்து புறம்புறத் திரிந்த
           செல்வமே சிவபெருமானே
        யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
           எங்கெழுந் தருளுவ தினியே.

      பசிக்கும் காலத்தே குழந்தை அழுமுன்னே அதனை அறிந்து பாலை ஊட்டுகின்ற கருணையுடைய தாயைக் காட்டிலும் மிகவும் அன்பு கொண்டவனே! பாவியாகிய என்னுடைய உடம்பினை உருக்கி, உள்ளத்தில் ஞான ஒளியைப் பெருக்கி, அழியாத பேரின்பமாகிய தேனைப் பொழிந்து, போகுமிடமெல்லாம் என் உடன் திரிந்த அருட்செல்வம் ஆனவனே! சிவபெருமானே! உன்னை நான் உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் என்னை விட்டு எங்கே எழுந்தருளிச் செல்வது? காத்தருள்க.

    10.  புன்புலால் யாக்கை புரைபுரை கனியப்
           பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்
        என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட
           ஈசனே மாசிலா மணியே
        துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காந்
           தொடக்கெலாம் அறுத்தநற் சோதீ
        இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
           எங்கெழுந் தருளுவ தினியே.

        அற்பமாகிய என் புலால் நாற்றம் வீசும் மயிர்க்கால் தோறும் நெகிழ்ச்சி அடையுமாறு அதனைப் பொன்னாலாகியக் கோயில் எனக் கருதி அதன்கண் எழுந்தருளியவனே! என் எலும்புகளை யெல்லாம் உருகும்படி செய்து எளியவனாகிய என்னை ஆண்டருளிய ஆண்டவனே! குற்றமற்ற மாணிக்கமே! நீ என் உள்ளத்துப் புகுந்ததால் பிறப்பு, இறப்பு, வாழ்வுத் துன்பம், அறியாமை ஆகியவையின் தொடர்பு அறுபட்டு ஒழிந்தது. இன்ப வடிவானவனே! உனை இறுகப் பற்றினேன்.  என்னை விட்டு இனி நீ செல்வது தான் எங்கே ஐயனே?

திருச்சிற்றம்பலம்.


No comments:

Post a Comment