2 Nov 2013

தீராத வயிற்று நோய் தீர்க்கும் பதிகம்- Chronic abdominal therapeutic Pathigani( To Cure the Noncurable Stomach ache)


3. தீராத வயிற்று நோய் தீர்க்கும் பதிகம்
(திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது)

பண்- கொல்லி                                         4-ம் திருமுறை

    திருநாவுக்கரசு சுவாமிகள் சைவ சமயத்தில் பிறந்தவரா யிருந்தும்
 நம்பர் அருளாமையினால் கொல்லாமை மறைந்துறையும் சமண சமயம்
 சேர்ந்து, தருமசேனர் என்ற பெயருடன் அச் சமயத்தில் தலைசிறந்து
 விளங்கினார். அவரது தமக்கையாராகிய திலகவதியார் தமபியாரைப்
 பரசமயப் படுகுழியினின்றும் கரையேற்ற வேண்டும் எனப் பரமனைப்
 பல்லாற்றாலும் துதித்து வேண்டினார். திருவதிகை வீரட்டானேசுவரரும்
 திலகவதியாருக்கு இரங்கி கனவில் தோன்றித் தம்பியாரைச் சூலை
 மடுத்து ஆள்வோம் எனக் கூறியருளி, அவ்வண்ணமே தருமசேனரைச்
 சூலை நோய் சென்றடையுமாறு அருள, அதுவும் கடுங்கனல்,
 கொடுவிடம், வச்சிரம் மற்றும் கொடிய அனைத்தும் ஒன்று சேர்ந்தது
 போல அவரது வயிற்றையடைந்து குடரினை முடக்கிக் பெருந்
 துன்பத்தை விளைவித்தது. அக்கொடிய சூலையைப் போக்க இயலாது
 சமணர்கள் கைவிட்டனர். பின்னர் இறைவர் திருவருள் கூடியமையால்
 தருமசேனர் திருவதிகை சென்று தமக்கையாரைச் சரணடைந்தார்.
 திலகவதியாரும், தம்பிக்கு ஐந்தெழுத்தோதித் திருநீறு அளித்தார்.
 

 தம்பியாரும் திலகவதியார் அளித்த திருவாளன் திருநீற்றை உருவாரப்

 பூசித் தமக்கையார் முன்பு செல்லத் தாம் பின்சென்று திருக்கோயிலை

 யடைந்தார்.  இறைவர்  திருமுன்பு  விடுக்கப்பட்ட  அவர்,  தரைமீது

 வீழ்ந்து இறைஞ்சித் தமிழ்மாலை சாத்தும் உயர்வு  பெற 'கூற்றாயின

 வாறு'  எனத்  தொடங்கும்  இத்திருப்பதிகத்தைப்  பாடிப் பரமனைத்

 துதித்தார். உடனடியாக அவரது  வயிற்றினைத் தாக்கி வந்த கொடிய

 சூலை நோய்  அகன்றது. ஈசன், பொருள்சேர் பதிகம் அருளிச் செய்த

 தன்மை கண்டு மகிழ்ந்து, 'திருநாவுக்கரசர்' என்னும் பெயர் உலகிடை

 மலர்வதாக   என   அசரீரியாய்த்   திருவாய்    மலர்ந்தருளினார்.

 திருநாவுக்கரசர்  என்னும்  திருநாமமானது  இறைவனால்   அருளப்

 பெற்றது  எனக்  கொள்க.  இவருடைய  பூர்வ  திருப்பெயர் மருள்

 நீக்கியார் என்பதாம்.      

    இது ஒரு அற்புதத் திருப்பதிகம் ஆகும். நோயின் கொடுமையைப்
 பதிகத்தின் மூலம் உணரலாம். இதுபொன்ற வயிறு, குடல் தொடர்பான
 கொடிய  நோய்கள் இத் திருப்பதிகத்தைப் பாராயணம் செய்து சிறிது
 திருநீற்றைத் தண்ணீரிலிட்டு அருந்திவர, விலகும் என்பது பெரியோர்கள்
 அனுபவத்தில் அறிந்த உண்மை. இப்பதிக வரலாறே இதற்குச் சான்று
 பகரும்.
திருச்சிற்றம்பலம்;.

திருச்சிற்றம்பலம்



பாடல்:

   1.   கூற்றாயின வாறு விலக்ககிலீர் 
           கொடுமைபல செய்தன நானறியேன்
       ஏற்றார்யடிக்கே இரவும் பகலும்
           பிரியாது வணங்குவன், எப்பொழுதும்
       தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
           குடரோடு துடக்கி முடக்கியிட
       ஆற்றேன்அடியேன், அதி கைக்கெடில
           வீரட்டானத்துறை அம்மானே.

பொருள்:

 1. கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.
திருவதிகையில் கெடில நதியின் பக்கத்தில் மேவும் வீரட்டானத்தில் வீற்றிருக்கும் அழகிய தலைவனே! வினைப் பயனால் பிணியுற்றுத் துன்புறுதல் நியதியாயினும், அத்தகைய வினையானது யாதென அறியேன். அத்துன்பமானது, எத்தகைய தீர்வுக்கும் இடம் இன்றி என் உடலின்கண் குடரோடு சேர்ந்து வருத்துகின்றது. அப்பிணியானது கூற்றுவனைப் போன்று வருத்துகின்றது. என்னால் தாங்க முடியவில்லை. அதனை விலக்காதது ஏனோ! காளை வாகனத்தில் வீற்றிருப்பவரே! என்னைப் பீடித்துள்ள வயிற்று நோயைத் தீர்த்தருள்வீராக. நான் உமது திருவடிக்கே ஆளாக்கப்பட்டுத் தேவரீரைப் பகலிலும் இரவிலும் பிரிதல் இல்லாது வணங்குவேன்.
       


பாடல்:

  2.   நெஞ்சம்உமக் கேயிடமாக வைத்தேன்
           நினையாதொரு போதும் இருந்தறியேன்
       வஞ்சம்இது ஒப்பது கண்டறியேன்
           வயிற்றோடு துடக்கி முடக்கியிட
       நஞ்சாகி வந்தென்னை நலிவதனை
           நணுகாமல் துரந்து கரந்துமிடீர்
       அஞ்சேலுமென் னீர்அதி கைக்கெடில
           வீரட்டானத்துறை அம்மானே.

பொருள்:

 2. வீரட்டானத்தில் வீற்றிருக்கும் அன்பிறுகுரிய நாதனே! என்னுடைய நெஞ்சத்தில் உம்மையே பதித்து உள்ளேன். உம்மை நினைக்காமல் ஒருபோதும் இருந்ததில்லை. அத்தகைய என்னை காவாதிருப்பது நல்லதா? இது போன்ற வஞ்சகச் செயலை நான் கண்டதில்லை. என் மீது வந்து பற்றிக் கொண்டு நஞ்சு போன்று அச்சத்தைத் தரும் வயிற்றுப் பிணியை அகலுமாறு செய்வீர். அஞ்சாதே என்று உரைத்து அச்சத்தைப் போக்குவீர்.


பாடல்:

 3.  பணித்தாரன பாவங்கள் பாற்றவல்லீர்
           படுவெண்டலை யில்பலி கொண்டுழல்வீர்
       துணிந்தே யுமக்காட் செய்து வாழலுற்றால்
           சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
       பிணிந்தார் பொடிகொண்டு மெய்பூசவல்லீர்
           பெற்றமேற்றுகந்தீர் சுற்றும் வெண்டலை கொண்(டு)
       அணிந்தீPர் அடிகேளதிகைக் கெடில
           வீரட்டானத்துறை அம்மானே.  

பொருள்:

 3. திருவதிகையில் கெடில நதிக்கரையிண் கண் உள்ள வீரட்டானத்தில் உறையும் நாதனே! இறந்தவர்களை எரித்துப்பெறும் சாம்பலைத் திருமேனியில் பூசும் பெருமானே! இடப வாகனத்தின் மீது அமர்ந்து மகிழ்பவரே, கழுத்தைச் சுற்றிலும் வெண்டலை கொண்டு அணிந்தவரே, தேவரீரைப் பணிந்து போற்றும் அடியவர்களின் பாவங்களைத் தீர்த்த்தருளும் வல்லமை உடையவரே! பிரம கபாலத்தைக் கையில் ஏந்திப் பிச்சையேற்று உழல்பவரே! தேவரீர், எனக்கு அருள் புரிவீர் என்னும் துணிவால் உமக்கு ஆட்பட்டேன். இடப வாகனத்தில் மேவும் ஈசனே! சூலை நோய் என்னை சுட்டெரிக்கின்றது. அதனை விலக்குவீராக.



பாடல்:

  4.   முன்னம் அடியேன் அறியாமையினால்
           முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
       பின்னை அடியேன் உமக்கு ஆளும் பட்டேன்
           சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
       தன்னை அடைந்தார்வினை தீர்ப்பதன்றோ
           தலையாயவர் தம்கடன் ஆவதுதான்
       அன்ன நடையார் அதிகைக் கெடில
           வீரட்டானத்துறை அம்மானே.

பொருள்:

 4. வீரட்டானத்தில் வீற்றிருக்கும் பெருமானே! முன்பு, அறியாமையால் இருந்தேன். அப்போது எனக்குச் சூலை தந்து, துன்பப்படுத்தி, என்னை நலியுமாறு செய்தீர். இப்போது நான் தேவரீருக்கு ஆட்பட்ட அடிமையானேன். அப்பிணி என்னைச் சுடுகின்றது. தலைவராகிய தேவரீர், அடியவர்களுடைய துயரைத் தீர்ப்பதன்றோ செய்யத் தகுந்த செயல்;. அதனைப் புரிந்தருளும் வகையில் சூலை நோயைத் தீர்த்தருள்க.



பாடல்:

 5.   காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற்
           கரைநின்றவர் கண்டுகொள் என்று சொல்லி
       நீத்தாய கயம்புக நூக்கியிட
           நிலைக்கொள்ளும் வழித்துறை ஒன்றறியேன்
       வார்த்தையிது வொப்பது கேட்டறியேன்
           வயிற்றோடு துடக்கி முடக்கியிட
       ஆர்த்தார்புன லார்அதி கைக்கெடில
           வீரட்டானத்துறை அம்மானே

பொருள்:

  5. நீர் நிறைந்த கெடிலத்தின் கரையிலுள்ள வீரட்டானத்துறையில் மேவும் அம்மானே! நீரின் ஆழத்தில் சிக்கித் தடுமாறிப் பின் மீண்டும் எழும் வழித்துறை அறியாது தவிப்பது போன்று நைகின்றேன். கரையில் நின்று அறிவுறுத்திய மொழியைக் கேளாது இகழ்ந்தமையால், நீரில் வீழ்ந்து இவ்வாறு அழிகின்றேன். கரையேறும் வழியறியேன். வயிற்றுடன் தொடக்கி முடக்க வருந்துகின்றேன். அருள்வார்த்தை கூறி அருள்வீராக.



பாடல்:

 6.   சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
           தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
       நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
           உன்நாமம் என்நாவில் மறந்தறியேன்
       உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்
           உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
       அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில
           வீரட்டானத்துறை அம்மானே.

பொருள்:

  6. வீரட்டானத்தில் வீற்றிருக்கும் ஈசனே! நல்ல நீர்; கொண்டு தேவரீரை அபிNஷகம் செய்து, தூய மலர் சாற்றித் தூபம் காட்டி ஏத்தும் பூஜை வழிபாட்டினை யான் மறந்ததில்லை.  நற்றமிழால் இசைபாடிப் போற்றும் மாண்பினை மறந்ததில்லை. நன்மையை அடைந்த காலத்திலும் தீமை உற்ற காலத்திலும் தேவரீரை மறந்ததில்லை. தேவரீரின் திருநாமத்தை மறந்ததில்லை. கபாலத்தை ஏந்திப் பலி கொண்டு உழல்பவரே! எனது உடம்பில் வாட்டும் சூலை நோயால் நான் கலங்குகின்றேன். அதனைத் தவிர்த்தருள்வீராக.   



பாடல்:

 7.   உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும்
           ஒருவர்தலை காவல் இலாமையினால்
       வயந்தே உமக்காட் செய்து வாழலுற்றால்
           வயிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
       பயந்தேயென் வயிற்றின் அகம்படியே
           பறித்துப் புரட்டி அறுத் தீர்த்திட நான்
       அயர்ந்தேன் அடியேன் அதிகைக் கெடில
           வீரட்டானத்துறை அம்மானே.

பொருள்:

 7. வீரட்டானத்தில் வீற்றிருக்கும் ஈசனே! இவ்வுலகில் எனக்கு வழி நின்று உணர்த்துபவர் இல்லாத காரணத்தால் மனை வாழ்க்கையும், போகம் தரும் செல்வங்களுமே உயர்வுடையதெனப் பொய்யாகக் கருதி யிருந்தேன். இப்போது அவை உயர்ந்தது அல்ல எனக் கருதி உமக்கு ஆட்செய்து வாழலாம் என்று நினைக்கும் போது, என் வயிற்றில் உள்ள சூலை நோயானது என்னை வாட்டிட நான் அயர்ந்தேன். அந்த நோய் என்னை வலித்து இழுக்கின்றது. அதனை நீக்கி அருள்வீராக.



பாடல்:

  8.   வலித்தேன் மனைவாழ்க்கை மகிழ்ந்தடியேன்
           வஞ்சம் மனமொன்றும் இலாமையினால்
       சலித்தால் ஒருவர்துணை யாருமில்லைச்
           சங்க வெண்குழைக் காதுடை யெம்பெருமான்
       கலித்தோயென் வயிற்றின் அகம்படியே
           கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன
       அலுத்;தேன் அடியேன் அதிகைக் கெடில
           வீரட்டானத்துறை அம்மானே.

பொருள்:

 8. வீரட்டானத்தில் வீற்றிருக்கும் ஈசனே! பொய்மையும் சூதும் கொண்ட மனத்தின் காரணமாக நன்மையை ஆய்ந்து அறியும் தன்மை இல்லாமையினால், மனை வாழ்க்கையால் வாழும் நெறியினை உலகத்தவரின் பெரும் பேறாக வலிந்து கருதினேன். இப்போது அது பேறு ஆகாது என அறிந்தேன். வெண் குழையைக் காதில் அணிந்து விளங்கும் பெருமானே! என் வயிற்றில் பிணி இருந்து என்னை அயர்விக்கின்றது. 
அதனை அகற்றுவீராக. 



பாடல்:

  9.  பொன்போல மிளிர்வதோர் மேனியினீர்
           புரிபுன் சடையீர் மெலியும் பிறையீர்
       துன்பே கவலை பிணியென்றி வற்றை
           நணுகாமல் துரந்து கரந்துமிடீர்
       என்போலிகள் உம்மையினித் தெளியார்
           அடியார் படுவது இதுவே யாகில்
       அன்பே அமையும் அதிகைக் கெடில
           வீரட்டானத்துறை அம்மானே.

பொருள்:

 9. வீரட்டானத்தில் வீற்றிருக்கும் ஈசனே! பொன் போன்ற ஒளிர்வுடைய திருமேனியுடையவரே! சடைமுடியும், பிறைச் சந்திரனும் உடையவரே! எனக்குத் துன்பமும் கவலையும் தரும் பிணியானது அணுகாதவாறு காத்தருள்வீர். அடியவர்கள் துன்புறுவது என்றிருப்பின், அவர்கள் உம்மை நன்கு உணர மாட்டார்கள். எனவே சூலையைத் தீர்த்தருள்வீராக. 



பாடல்:

 10.   போர்த்தாய் அங்கோர் ஆனையின் ஈருரித்தோல  
           புறங்காடரங் காநட மாடவல்லாய்
       ஆர்த்தான் அரக்கன்தனை மால்வரைக் கீழ்
           அடர்த்திட்டருள் செய்த வதுகருதாய்
       வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் 
           என்வேதனை யான விலக்கியிடாய்
       ஆர்த்தார் புனல் சூழ் அதிகைக் கெடில
           வீரட்டானத்துறை அம்மானே.

பொருள்:

10. வீரட்டானத்தில் வீற்றிருக்கும் ஈசனே! யானையின் தோலை உரித்துப் போர்த்து விளங்கும் நாதனே! சுடுகாட்டினை அரங்கமாகக் கொண்டு நடனம் புரியும் பெருமானே! ஆரவாரித்து எழுந்து வந்த இராவணனைக் கயிலை மலையின் கீழ் நெரித்துப் பின்னர் அருள் செய்த பேற்றினை என்னளவிலும் எண்ணிப் பார்ப்பீராக. நான் முன்பு உனை மறந்து நின்றாலும், இப்போது பிழையுணர்ந்து வருந்தி, புரண்டு, விழுந்து, எழுந்து வணங்குகிறேன். என் வேதனையை விலக்குவீர். 

திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment