31 Aug 2012

ஊமை, திக்குவாய் முதலியன நீங்கி நன்றாகப் பேச உதவும் பதிகம். 20


2. ஊமை, திக்குவாய் முதலியன நீங்கி நன்றாகப் பேச உதவும் பதிகம்.
(மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளியது)

ராகம் - மோகனம்                                                  8-ம் திருமுறை

    மாணிக்கவாசக சுவாமிகள் தில்லையில், ஊருக்கு வெளியே தங்கியிருந்தார். அப்போது ஈழநாட்டு அரசன், அவனது ஊமை மகள், பௌத்த குரு ஆகியோர் தில்லைவாழ் அந்தணர்களுடன் சமய வாதம் செய்ய வந்தார்கள். நடராசப் பெருமான் அந்தணர்களின் கனவிலே தோன்றி, 'நீங்கள் சிறிதும் வருந்த வேண்டா, என் அன்பிற்குரியவனான வாதவூரன் இந்நகரத்தின் கிழக்குத் திசையிலுள்ள சோலையில் குடில் அமைத்து வாழ்ந்து வருகிறான். அவனிடம் சென்று, இச்செய்தியைச் சொல்லுங்கள், அவன் விரைந்து வந்து புத்த குருவுடன் தருக்கம் செய்து வெற்றி பெறுவான்' என்று கூறி மறைந்தார். அவ்வாறே மணிவாசகப் பெருமானும் அழைத்து வரப்பட்டார். 
       
     சமயவாதம் தொடங்கப்பெற்றது. புத்த குரு கூறியவை அனைத்தையும் மாணிக்கவாசக சுவாமிகள் ஆதாரத்தோடு மறுத்து அவனை நிலைகுலையச் செய்தார். தான் தோல்வியடையப் போவது உறுதி என்பதை உணர்ந்த புத்த குரு பொருத்தமில்லாத சில கேள்விகளைக் கேட்டான்ளூ பிறகு சிவபெருமானை நிந்திக்கத் தொடங்கினான். அதை அறிந்த மாணிக்கவாசகர் கோபம் கொண்டார். அவர்களது கொட்டத்தை ஒடுக்கும் பொருட்டு, புத்த மன்னன் நீங்கலாக மற்றவர்கள் அனைவரும் ஊமையாகும்படி பெருந்தகை இறைவனை வேண்டினார். அடுத்த கணமே அங்கிருந்த புத்தர்கள் அனைவரும் ஊமைகளானார்கள். 

     அதைக் கண்ட இலங்கை மன்னன், மாணிக்கவாசகரை வணங்கி, 'ஐயன்மீர்! இதோ! இங்கிருக்கும் என் மகளோ பிறவி ஊமை. இவளைத் தாங்கள் பேச வைத்தீர்களானால் தங்கள் அடியவனாவேன்ளூ சைவத்தைத் தழுவி உய்வேன்' என்று கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டான்.  

     மாணிக்கவாசகர், பிறவி ஊமையாக இருந்த அப்பெண்ணை தமக்கு முன்னால் வரவழைத்து, 'புத்த குரு கேட்ட கேளிவிகளுக்கெல்லாம் நீயே பதில் சொல்' என்று பணித்தார். அடுத்த நொடியே அப்பெண் பேசத் தொடங்கினாள். புத்த குரு கேட்ட கேள்விகளையும், அவற்றிற்கு இலங்கை மன்னனுடைய மகள் கூறிய பதில்களையும் தொகுத்துப் பெண்கள் விளையாடும்போது பாடி மகிழும் வகையில் பாடல்களாகப் பாடினார் மணிக்கவாசக சுவாமிகள். அப்போது அருளியதுதான் திருச்சாழல் என்னும் இத்திருப்பதிகம். சாழல் என்பது பெண்கள் இரண்டு அணியாகக் கைகோத்து நின்று ஒரு அணி வினவ, மற்ற அணி பதில் கூற ஆடும் ஒரு வகை விளையாட்டு. இப்பதிகம் பாடி, ஈழநாட்டு அரசனின் பிறவி ஊமை மகளை பேசவைத்து அற்புதத்தை நிகழ்த்தினார் மணிவாசகர், ஈழ அரசன் சைவம் சார்ந்தான். 

    மருத்துவர்கள் கைவிட்டுவிட்ட பொழுதும் கைவிடாது காப்பது இப்பதிகம். பிறவி ஊமையையே நீக்கிய இவ்வற்புதத் திருப்பதிகம் திக்குவாய், கொச்சையாகப் பேசுதல் முதலிய கோளாறுகளை நீக்கி, வாக்கு வன்மையைத் தரும் என்பதில் ஐயமும் உண்டோ? நம்பிக்கையுடன் முயல்வார்க்கு ஊமையையும் நீக்கிப் பேசவைக்கும் என்பது திண்ணம்.  

திருச்சிற்றம்பலம்

     1.  பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
        பேசுவதுந் திருவாயால் மறைபோலுங் காணேடீ
        பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை
        ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ.

      தோழியே! உங்களுடைய இறைவன் பூசிக் கொள்வது வெண்மையான திருநீறு. சீறுகின்ற பாம்பை அணிகலனாக அணிந்து கொள்கின்றான். அவன் திருவாயரல் பேசுவது வேதம். தெய்வம் என்னும் ஒரு பொருளுக்கு இவையெல்லாம் பொருந்துமா? 
      பூசுகின்ற பொருளாலும், பேசுகின்ற பேச்சாலும், அணிகின்ற ஆபரணத்தாலும் என்ன குறை? அவன் எல்லா உயிர்களுக்கும் இறைவனாய் இருக்கின்றான். 

   
2.  என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தானீசன்
        துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ
        மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத் 
        தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ.

    தோழியே! எமது தந்தையும், எம் பெருமானும், எல்லார்க்கும் ஈசனும் என்று சொல்லுகின்றாய். அத்தகைய நிலையில் இருக்கிறவன் கிழிந்து போன துணியைக் கோவணமாக அணிந்து கொள்வது ஏன்?
    அவனுக்குப் பொருள் செறிந்ததும், அழியாததுமாகிய நான்கு வேதங்களே பெரிய அரைஞாணாகவும் மெய்ந் நூலில் நிறைந்துள்ள பொருளே கோவணமாகவும் அமைந்திருக்கிறது

     3.  கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
        தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடீ
        தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயினிடினும்
        காயில் எலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ.

      தோழியே! சுடுகாடே உங்கள் இறைவனின் கோயிலாக உள்ளது. கோல்லுகின்ற புலித் தோலையே நல்ல ஆடையாக அணிந்துள்ளான். தாய் தந்தை அற்றவன். உறவினர் யாரும் இல்லாத தனியன். இது பெருமைக்குரியதோ?  
      தாயும் தந்தையும் இல்லாத தனியனாய் இருப்பினும் அவன் கோபம் கொண்டால் எல்லா உலகங்களும் கல்லின் பொடிப்போலத் தூளாகிவிடும்.
     4.  அயனை அனங்கனை அந்தகனைச் சந்திரனை
        வயனங்கள் மாயா வடுச்செய்தான் காணேடீ
        நயனங்கள் மூன்றுடைய நாயகனே தண்டித்தால்
        சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ.

      தோழியே! பிரம தேவனையும், மன்மதனையும், எமனையும், சந்திரனையும்வருத்தியடக்கியமை, அவனுடைய பழிப்புக்கு ஆளான தன்மையையன்றோ காட்டுகின்றது? இது நல்லதாமோ?
      பரமன் முக்கண்ணன். அவனுடைய மூன்றாவது கண் அதீத நிலையைக் குறிக்கும் ஞானக்கண் ஆகிறது. பிரபஞ்சத்தில் உழலும் தேவர்கள் குறைபாடு உடையவர்கள் என்பதை அவர்களுக்கு எடுத்துக் காட்டுதற் பொருட்டுப் பரமன் அவர்களைத் தண்டித்தார். இறைவனால் தண்டிக்கப்பட்டது தேவர்களுக்கு வெற்றியாகும்.  

     5.  தக்கனையும் எச்சனையும் தலையறுத்தத் தேவர்கணம்
        தொக்கனவந் தவர்வம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ 
        தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி அருள்கொடுத்தங்கு
        எச்சனுக்கு மிகைத்தலைமற் றருளினன்காண் சாழலோ.

      தோழியே! யாகத்தை உண்டாக்கிய தக்கனையும், யாகத்தின அதி தேவனாகிய எச்சனையும் தலையை அறுத்தான். கூட்டமாக வந்த தேவர்களை வருத்தி அடக்கினான். இஃது என்ன செய்கையோ?
      கூட்டமாக வந்த தேவர்களை வருத்தி யடக்கினாலும் அவர்களுக்கு இரங்கி அருள் செய்தான். யாகம் இயற்றிவனாகிய தக்கனுக்கு ஆட்டுத் தலையைக் கொடுத்து அருளினான். இவை அருள் செயலே.  

     6.  அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய்
        நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ
        நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம்
        சலமுகத்தால் ஆங்காரந் தவிரார்காண் சாழலோ.

           தோழியே! பிரமனும் திருமாலும் திகைப்படையும்படி தேடி அறியா வண்ணம் அழற் பிழம்பு வடிவினனாய்ப் பூவுலகம் முதல் பாதாளம் வரை அண்ட முடிவைப் பொருந்த நின்றது எக்காரணம் பற்றி?
      அவ்வாறு அவன் நிற்காவிடில், அவர்கள் இருவரும் அறியாமையால் ஏற்பட்ட அகங்காரத்தை விட்டிருக்க மாட்டார்கள்.

     7.  மலைமகளை யொருபாகம் வைத்தலுமெ மற்றொருத்தி
        சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ
        சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம்
        பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ்; சாழலோ.

      தோழியே! பார்வதி தேவியைத் தனது திருமேனியில் ஒரு பாகத்தில் வைத்திருந்தும், மற்றொருத்தி நீர் வடிவாக அவனுடைய சடையில் சென்று பொருந்தியது எக்காரணத்தினால்? 
      நீர் வடிவாக அவன் சடையில் அவள் பாய்ந்திராவிடில், உலகமெல்லாம் அவள் வேகத்தில் படடுப் பாதாளத்தில் அழுந்தி பெருங்கெடுதி உண்டாகி விடும்;.

     8.  கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த
        ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னேடீ
        ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட
        மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ.

      தோழியே! அக்காலத்தில் ஆரவாரத்துடன் ஒலிக்கின்ற கடலில் தோன்றிய ஆலகால விடத்தை உண்டான். இதனால் அவன் பெருமைதான் என்ன?
      ஆலகால விடத்தை உண்டிராவிடில் பிரமதேவன், திருமால் உள்ளிட்ட மேன்மையுடைய தேவர்கள் அனைவரும் இறந்தொழிந்திருப்பார்கள்.

     9.  தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன்
        பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ
        பெண்பா லுகந்திலனேற் பேதாய்இரு நிலத்தோர்
        விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ.

    தோழியே! தென் திக்கை நோக்கி ஆடுகின்ற தில்லைச் சிற்றம்பலமுடையவன் பெண்ணின் பாகத்தை விரும்பினான். அதனால் பெரிதும் பித்துக் கொண்டவன் ஆவான்.  
    அறிவிலிப் பெண்ணே! அவன் பெண்ணின் பகுதியை விரும்பாவிடில் பெரிய நிலவுலகில் உள்ளோர் விண்ணுலகம் அடைவதற்குரிய யோக நிலையிலேயே நின்று, அதனை முற்றுவிக்க மாட்டாமல் இறப்பர்.

    10.  தானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை
        ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ
        ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள்
        வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ.

      தோழியே! முடிவில்லாத பெரியோன் அவன் என்று உன்னால் சொல்லப்பட்ட இறைவன், தன்னை விரும்பி அடைந்த நாய் போன்ற தன்மையுடைய என்னை இன்பக் கடலில் திளைக்கச் செய்தான். இதனை அறிந்து கொள்.
        உன்னை இன்பக் கடலுள் திளைக்கச் செய்த திருவடிகள் விண்ணுலகத்தில் வாழுகின்ற தேவர்களுக்குக் கிடைப்பதற்கரிய ஒப்பற்ற பெரும் பொருளாகும். இதனை அறிந்து கொள்.

    11.  நங்காய் இதென்னதவம் நரம்போ டெலும்பணிந்து
        கங்காளந் தோள்மேலே காதலித்தான் காணேடீ
        கங்காளம் ஆமாகேள் காலாந்த ரத்திருவர்
        தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ.

      ஏ! தோழியே! நரம்பினையும், ஓட்டினையும், எலும்பினையும் அணிந்து கொண்டதும் அல்லாமல் முழு எலும்புக் கூட்டினையும் தோள் மேலே தாங்க விரும்பினான். இது என்ன தவ வேடம்?
      எலும்புக்கூடு வந்த விதத்தைக் கேட்பாயாக! Nரூழி முடிவில் திருமால்,பிரமன் ஆகிய இருவரது வாழ்நாளை முடிவு செய்து அவர்கள் எலும்பைத் தரித்தனன் என்பதை அறிக.

    12.  கானார் புலித்தோல் உடைதலைஊண் காடுபதி
        ஆனா லவனுக்கிங் காட்படுவார் ஆரேடீ
        ஆனாலும் கேளாய் அயனந் திருமாலும்
        வானாடர் கோவும் வழியடியார் சாழலோ.

      தோழியே! அவனுடைய ஆடை, காட்டில் வாழுகின்ற புலியினுடைய தோல். மண்டையோட்டிலே உண்பவன். மயானத்தில் உறைபவன். இவ்வாறு அருக்கும் அச்சிவபெருமானுக்கு இந்நிலவுலகில் அடிமைப் படுபவர் யார்? 
      அவ்வாறாயினும் அதைப் பற்றிச் சொல்கிறேன் கேள். பிரமனும், திருமாலும், தேவலோகத் தலைவனாகிய இந்திரனும் அவனுக்குப் பரம்பரையாய் அடியார்களாய் உள்ளார்கள். 

    13.  மலையரையன் பொற்பாவை வாள்நுதலாள் பெண்திருவை
        உலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீ
        உலகறியத் தீவேளா தொழிந்தனனேல் உலகனைத்துங்
        கலைநவின்ற பொருள்களெல்லாங் கலங்கிடுங்காண் சாழலோ.

      தோழியே! பனிமலையரசனின் மகள், பொற்பதுமை போன்றவள், ஒளிபொருந்திய நெற்றியை யுடையவள் உமாதேவி. அத்தகைய பெண் செல்வத்தை உலகினர் அறியும்படி அக்னி சாட்சியாகத் திருமணம் செய்து கொண்டான் என்பது என்ன? 
      உலகினர் அறியும்படி அக்னி சாட்சியாக அவன் திருமணம் செய்து கொள்ளாவிடில் எல்லா உலகமும், நுல்களில் கூறிய எல்லாக் கருத்துக்களும் நிலை மாறும் என்றறிக!

    14.  தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
        தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ
        தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம்
        ஊன்புக்க வேற்காளிக் கூட்டங்காண் சாழலோ.

      தோழியே! தேன் பொருந்திய குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த தில்லைத் திருச்சிற்றம்பல வுடையான் தான் திருவாலங்காட்டுக்குச் சென்று திருநடனம் பண்ணியது என்ன காரணம்?
      தான் அங்குச்சென்று திருநடனம் செய்யாவிடில் உலகமெல்லாம் புலால் பதிந்த வேலாயுதத்தை உடைய காளிக்கு ஊட்டப்படும் உணவாகி விடும் என்றறிக.

    15.  கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே
        இடபம்உகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ
        தடமதில்கள் அவைமூன்றுந் தழலெரிந்த அந்நாளில்
        இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ.

      தோழியே! மதம் பொருந்திய யானையிலும், குதிரையிலும், தேரிலும் விரும்பி ஏறாமல், எருதினை விரும்பி எறிய விதத்தை எனக்கு விளங்கும்படி சொல்வாய். 
     பெரிய மதில்களாகிய மூன்று கோட்டைகளையும் நெருப்பில் எரித்துச் சாம்பலாக்கிய அக்காலத்தில் திருமால் எருது உருவம் கொண்டு இறைவனைச் சுமந்தான். ஆகவே காளையை வாகனமாக்கினான்.

    16.  நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை
        அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ
        அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் ஆயிடினுங்
        கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோடே சாழலோ.

      தோழியே! பண்டைக் காலத்தில் கல்லால மரத்தின் கீழிருந்து சனகர் முதலான நால்வர்க்கும் நான்கு வேதங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களையே ஏன் அறமாக உபதேசம் செய்தான்?
     அக்காலத்தில் கல்லால் மரத்தின் கீழிருந்து நான்கு வேதங்களுள் சொல்லப்பட்ட கருத்துக்களையே அறமாக உபதேசம் செய்தான். ஆயினும் முன்பு தன்னை வழிபட்டுப் பின்னர் தன்னை மறந்தவர்களது முப்புரங்களையும் முற்றிலும் எரித்து அழித்தனன் என்பதை அறிக. 

    17.  அம்பலத்தே கூத்தாடி அமுதுசெயப் பலிதிரியும்
        நம்பனையுந் தேவனென்று நண்ணுமது என்னேடீ
        நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியா
        எம்பெருமான் ஈசாவென் றேத்தினகாண் சாழலோ.

      தோழியே! பொது இடத்தில் கூத்தாடினான். உண்பதற்குப் பிச்சை ஏற்றுத் திரிகின்றான். இத்தன்மையுடைய சிவனையும் கடவுள் என்று அடைவது ஏன்?
    சிவபெருமான் கடவுளாகின்ற விதத்தைக் கேட்பாயாக! நான்கு மறைகள், மற்றைய தேவர்கள் போலச் சிவபெருமானை அறியாதனவாகிப் பின் 'எங்கள் தலைவனே! ஈசனே!' என்று புகழ்ந்தன எனபதை அறிக. 

    18.  சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி
        நலமுடைய நாரணர்கன் றருளியவா றென்னேடீ
        நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தரனடிக்கீழ்
        அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ.

      தோழியே! போரில் தணியாத வீரச் செருக்குடைய சலந்தரன் என்னும் அரக்கனது உடலை வெட்டிய வலிமை மிக்க சக்கரப் படையை, நலம் மிக்க திருமாலுக்கு அக்காலத்தில் சிவபெருமான் கொடுத்தருளிய காரணம் என்ன?
      நலம் மிக்க நாரணர், சிவபெருமானை ஆயிரம் தாமரை மலர்களால் வழிபட்டு லரும்போது ஒன்று குறைய தன் கண் ஒன்றையே பறித்து மலராக அருச்சித்தான். அதனால் சிவபெருமான் நாரணருக்குத் தன் சக்கரத்தைக் கொடுத்தருளினான் என்றறிக.

    19.  அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம்
        எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ
        எம்பெருமான் ஏதுடுத்தங் கேதமுது செய்திடினுந்
        தம்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ.

      தோழியே! புள்ளியை உடைய தோல் எம்பெருமான் ஆடையாகும். ஆலகால விடம் அருமையான அமுதமாக எம்பிரான் உண்ட திறமையை எனக்குத் தெளிவாகக் கூறுக.
      எம்பெருமான் எதனை உடுத்து, எதனை உண்டாலும் தன்னுடைய பேராற்றலைத் தான் அறிந்து கொள்ளாதத் தன்மை உடையவன் என்பதைத் தெரிந்து கொள். 

    20.  அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கனையும்
        இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ
        அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேல்
        திருந்தவருக் குலகியறிகை தெரியாகாண் சாழலோ.

      தோழியே! அருந்தவம் செய்த சனகாதி முனிவர்க்குக் கல்லால மரத்தின் கீழிருந்து அறம் முதலிய நான்கு வேதங்களையும் அவர்கட்கு உரைத்தருளிய காரணத்தை எனக்குத் தெளிவாகக் கூறுவாயாக!
      தவமுடைய அவர்களுக்கு அறம் முதலிய நாற்பொருளையும் அந்நாளில் சொல்லியருளாவிடில் அந்தச் சனகாதியர்க்கு உலகின் இயல்பு தெரியாது போய்விடும் எனடபதனை அறிவாயாக. 

திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment